கடந்த ஆண்டு மலாக்கா டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தாமதமாகி வருவது குறித்து கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மரண விசாரணைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யவுள்ளதாக போலீஸ் தெரிவித்ததைச் சுட்டிக் காட்டிய அவர், இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சட்டத்துறை அலுவலகமான ஏஜிசி, இந்தச் சம்பவம் தொடர்பாக மரண விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை, மலேசியாவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் விசாரணையில் ஆஜராகாமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் லிம் லிப் எங் தெரிவித்துள்ளார்.
அதற்கு உதாரணமாக, அண்மையில் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர குடியிருப்பில் நடந்த ஆயுதக் கொள்ளை வழக்கில், 6 வெளிநாட்டவர்கள் மீது அவர்கள் இல்லாத நிலையிலேயே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, நவம்பர் 24-ஆம் தேதி டுரியான் துங்காலில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் போலீஸ் நடவடிக்கையின் போது 24 முதல் 29 வயதுடைய மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகவும், அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாகவும் போலீசார் கூறினர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, முறையான விசாரணை கோரினர்.
இந்நிலையில் போலீஸ் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்த சட்டத்துறை தலைவர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணங்களையும், இதில் ஏதேனும் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதையும் கண்டறிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த மரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








