நீலாய், டிசம்பர்.29-
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை, வரும் ஜனவரி 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வெடிச் சம்பவத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக 62 வயதுடைய அந்த சந்தேக நபர், சிரம்பான், துவாங்கு ஜஃபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, மூத்த உதவிப் பதிவாளர் சித்து நூர் அயின் அரிஃபின் பிறப்பித்தார்.
முகம், உடல், கைகள் மற்றும் கால்களில் தீக் காயங்களுக்குள்ளான அந்த சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் பாத்தாங் பெனார் பகுதியில் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
அவர் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்டதில், சுமார் 31 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கந்தகம், கார்பன் போன்ற மூலப்பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
இந்நிலையில், யியோ ஹோக் சுன் என்ற இயற்பெயரைக் கொண்ட அந்நபர் "மிகவும் ஆபத்தானவர்" என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.








