மலாக்கா மாநிலம் மாச்சாப், டுரியான் துங்கால் அணை நீர்த்தேக்கப் பாதுகாப்பு பகுதியை ஒட்டிய இடத்தில், கடந்த சனிக்கிழமை பீப்பாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு பாகங்கள் மனித எலும்புகள் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கு கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர் ஆணா? பெண்ணா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இன்று இரண்டாவது நாளாக பிரேதப் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
அந்த பீப்பாய் கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணியளவில், நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








