தோக்யோ, ஜப்பானில் இருந்து கேஎல்ஐஏ முனையம் 2-ற்கு வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில், அடையாளம் தெரியாத ஆடவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படத்தைப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி விமானம் தரையிறங்கிய போது, துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பொறியியல் குழுவினர் சோதனை செய்ததில் அச்சடலமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் எம். ரவி கூறுகையில், உயிரிழந்தவரின் புகைப்படம் போலீசாரிடம் கிடைத்துள்ள போதிலும், அவரது அடையாளம் இதுவரை தெரியவில்லை என்றார்.
அவர் 72 மணி நேரத்துக்கும் மேலாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில், அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் காணாமல் போனவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் குறித்து தகவல் உள்ளவர்கள், குறிப்பாக கேஎல்ஐஏ பகுதியில் இருந்தவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.








