கெடா, கூலிம் தாமான் திராம் பகுதியில் குடும்பப் பிரச்சினை மற்றும் பொறாமை காரணமாக கணவன்–மனைவிக்கிடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில், 39 வயதான இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டென்டன் சம்சுல் பின் சின்ரிங் தெரிவித்ததன்படி, நேற்று இரவு சுமார் 8.40 மணியளவில் சந்தேக நபர் லூனாஸ் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, தனது மனைவியை வீட்டில் மடிக்கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் சீலா த/பெ சுப்பிரமணியம், 39, உயிரிழந்தார்.
விசாரணையின் ஆரம்பத் தகவலின்படி, சந்தேக நபர் தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தியதாகக் கூறியுள்ளார். இதில் மார்புப் பகுதியில் ஏழு காயங்களும், வயிற்றுப் பகுதியில் ஐந்து காயங்களும், வலது விலா பகுதியில் ஒரு காயமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுடைய மடிக்கத்தியை சந்தேக நபர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார் என்று சம்சுல் சின்ரிங் குறிப்பிட்டார்
சம்பவத்துக்குப் பின்னர், தனது குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், இரவு சுமார் 9.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் தடயவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் 11 தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சூப்ரிண்டென்டன் சம்சுல் பின் சின்ரிங் தெரிவித்தார்.









