கோலாலம்பூர் ஶ்ரீ பெட்டாலிங் பகுதியில், கடை ஒன்றின் முன்பு கிடந்த சந்தேகத்திற்கிடமான பெட்டி குறித்து 33 வயது பெண் ஒருவர் போலீசாருக்கு இன்று மதியம் 12.57 மணிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதற்கட்ட சோதனையில் அந்தப் பெட்டியில் அதிகளவிலான கதிர்வீச்சு பதிவானது கண்டறியப்பட்டதையடுத்து பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, கோலாலம்பூர் வெடிகுண்டு தடுப்புப் படை, புக்கிட் அமானின் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு, அணுசக்தி மற்றும் வெடிபொருள் பிரிவு மற்றும் மலேசிய அணுசக்தி நிறுவனத்தின் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் Recoilless Disruptor 5.0 கருவியைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான அப்பொருளை அழித்தனர்.
அப்பெட்டி அழிக்கப்பட்ட பின்னர், அதற்குள் வண்ணமயமான லேகோ போன்ற கட்டுமானத் தொகுதிகள் அடங்கிய பல பெட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








