கடந்த ஆண்டு பண்டார் உத்தாமா பள்ளியில், சக மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவி யாப் ஷிங் ஸுயேனின் தாயார் வோங் லீ பிங், தனது மகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுவன், இன்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பால் தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக வோங் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமான, கடின உழைப்பாளியான தனது மகளுக்கு பல கனவுகளும், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பல ஆசைகளும் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், மகளின் மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டாக, வேலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்தி அந்த இழப்பிலிருந்து மீள முயன்றதாக வோங் விவரித்துள்ளார்.
ஆனால், சில வலிகள் காலம் கடந்தாலும் மறைவதில்லை என்றும், அந்த வலியுடனேயே படிப்படியாக வாழ்க்கையைத் தொடரக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குற்றம் நிகழ்ந்த போது அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் விருப்பத்திற்கிணங்க அவரை பேராக் மாநிலம் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி அட்லின் அப்துல் மாஜிட் உத்தரவிட்டார்.








