Sep 14, 2026
Thisaigal NewsYouTube
தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!
தற்போதைய செய்திகள்

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

Share:

கூலிம், சுங்கை கராங்கான், தாமான் தேசா காயாங்கானில் உள்ள கால்வாயில் நான்கு சிறுவர்கள் தவறி விழுந்த சம்பவத்தில், 12 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், 8 மற்றும் 11 வயதுடைய மேலும் இரு சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இன்று செப்டம்பர் 14, 2026, இரவு சுமார் 7.30 மணியளவில், தாமான் தேசா காயாங்கான் பகுதியில் உள்ள கால்வாயில் நான்கு சிறுவர்கள் தவறி விழுந்ததாக சுங்கை கராங்கான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும், சுங்கை கராங்கான் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டென்டன் சம்சுல் பின் சின்ரிங் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நான்கு சிறுவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மற்ற இருவர் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் 12 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரு சிறுவர்களில் ஒருவர் 8 வயதுடையவர் என்றும் மற்றொருவர் 11 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக மற்றும் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சம்சுல் பின் சின்ரிங் தெரிவித்தார்.

சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் சிறுவர்கள் கால்வாயில் விழுந்ததற்கான காரணம் தொடர்பான தகவல்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News