நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்தில் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டதாகக் கூறி, மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், இரண்டு போலீஸ் புகார்களை அளித்துள்ளதை, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், போர்ட்டிக்சனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்புகார்களைப் பெற்ற போலீசார், விசாரணை ஆவணங்களைத் திறந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அது குறித்து மேலதிக கருத்துகளை தெரிவிக்க விரும்பவில்லை என்றும், போலீஸ் தங்களது முடிவின்படி புகார்களை கையாளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நான்கு பேர், தங்களை உண்டாங் எனக் கூறிக்கொண்டு, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரகடன ஆவணத்தை வெளியிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதியிடப்பட்ட அந்த ஆவணத்தில் இஸ்மாயில் மற்றும் அந்த நான்கு பேரும் கையெழுத்திட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தாம் கட்டாயப்படுத்தப்பட்டே கையெழுத்திட்டதாக கூறியுள்ள இஸ்மாயில், அந்த ஆவணம் செல்லாது என்றும், நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு 1959-ன் பிரிவு 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.








