முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், புகாரி இகுய்டி செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், இவ்வழக்கை 'விடுதலை செய்யப்படாமல் விடுவிக்கப்படும்' DNAA அடிப்படையில் முடிவுக்குக் கொண்டு வர துணை அரசு தரப்பு வழக்கறிஞர் அஹ்மாட் அக்ராம் காரிப் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நீதிபதி நூர் ருவேனா நுர்டின், முகைதீனை இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதில் மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளும், புகாரி இகுய்டி நிறுவனத்திடமிருந்து முகைதீன் 200 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
மற்றொரு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில், அந்த நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெற்றுக் கொள்ள அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








