Sep 15, 2026
Thisaigal NewsYouTube
நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

Share:

இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும், இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், தன்னை நாடு கடத்துவது தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தாம் கவலைப்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காதீர் மூலமாக அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகச் செய்திகளைப் பார்க்கும் போது, தன்னை நாடு கடத்துவது தொடர்பாக அன்வார் எந்தவொரு உறுதியையும் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊகத்தின் அடிப்படையில் பெரிதுபடுத்துவதாகவும் ஜாகிர் நாயக்கின் வழக்கறிஞர் அக்பெர்டின் விமர்சித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்ற அன்வார், புதுடில்லியில் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இதனிடையே, இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் மிகவும் கவனமாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் எடுக்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் ஜாகிர் நாயக், சமீப காலங்களில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றும் அக்பெர்டின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு அன்வார் வெளியிட்ட அறிக்கையில், ஜாகிர் நாயக் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கும் வரை அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அதே வேளையில், இந்தியா கூடுதல் ஆதாரங்களை வழங்கினால், நாடு கடத்தல் கோரிக்கையை மலேசியா பரிசீலிக்கலாம் என்றும் அன்வார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News