Sep 21, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்திடம் 50 கோடியை கோருகிறது மைக்கி
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்திடம் 50 கோடியை கோருகிறது மைக்கி

Share:

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பிக்கவிருக்கும் 2027 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளமான மைக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு தழுவிய நிலையில் பின்தங்கியுள்ள இந்திய வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்வதற்கும், தொழில் வளர்ச்சி பெறுவதற்கும் பிரதமரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மைக்கியின் தலைவர் டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று கோலாலம்பூர் பூமாலையில் உள்ள ரோயல் லேக் கிளப்பில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் உதவித் திட்டங்கள் மீதான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷணன் இதனைத் தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் இந்திய வர்த்தகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த உதவித் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கை நிறைவு செய்யும் வகையில் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார்.

குஸ்கோப் எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் பலதரப்பட்ட ஏஜென்சிகள் மூலம் சிறு மற்றும் நடத்தர இந்திய வணிர்களுக்கு உதவும் வகையில் 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கோபாலகிருஷ்ணன், பின்தங்கியுள்ள இந்திய வணிகர்களை உயர்த்தி விட வேண்டிய கடப்பாட்டில் மைக்கி இருப்பதால் அரசாங்கத்திடம் வருகின்ற பட்ஜெட்டில் குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய நிதியை, பிரதமர் துறையில் உருவாக்கப்படக்கூடிய ஒரு செயலகமே நிர்வகிக்கும் நிலை ஏற்பாட்டால் இந்த நிதியின் மூலம் இந்திய வணிகர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இந்திய சிறு மற்றும் நடத்தர வணிகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கத்தக்கதாகும் என்று நிகழ்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை திசைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன், அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் நாட்டில் இன்னும் அதிகமான இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை வணிக ரீதியாக உயர்த்த முடியும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தங்களின் கருத்தை முன்வைத்தனர்.

Related News