கோலாலம்பூர், ஜூலை.31-
13வது மலேசிய திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஐந்து வயது முதல் பாலர் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
பாலர் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 98 சதவீதத்தை எட்டுவதையும், உலகளாவியச் சராசரியை விட அதிகமாக இருப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உகந்த பள்ளிக் கல்வி நேரம், சிறப்புப் பள்ளிகளின் செயல்திறன் மற்றும் திறமையான மாணவர்களுக்கான கல்வி மாதிரியை மேம்படுத்துவது குறித்தும் ஒரு மதிப்பாய்வு நடத்தப்படும் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் தேசிய கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், அனைத்துலக கணிதம் மற்றும் அறிவியல் படிப்பில் சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டின் தரங்களுக்கு இணையாகக் கொண்டு வரவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
இன்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.








