கோலாலம்பூர், நவம்பர்.16-
இணைய மோசடிகள், போலியான செய்திகள், இணைய மிரட்டல்கள் ஆகியவற்றிலிருந்து இளம் பெண்களைப் பாதுகாக்க, டிஜிட்டல் கல்வியறிவுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது இன்று மிகப் பெரியச் சவாலாக மாறியுள்ளதாகவும், இஃது இளம் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.
இன்று நடந்த தேசிய பெண்கள் சாரணியர் சீருடை இயக்கத்தின் 109 வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய வான் அஸிஸா, இவ்வாறு குறிப்பிட்டார்.
இணைய மோசடி, இணைய மிரட்டல் போன்ற அபாயங்களில் சிக்காமல் இருக்க, மாணவிகள், சீருடை சங்கத்தினர் ஆகியோரின் மத்தியில் விழிப்புணர்வும் பாதுகாப்பும் உடனடியாக உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று அவர் அவசர அழைப்பு விடுத்தார். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, தொழில்நுட்ப அறிவும் நெறிமுறையும் கொண்ட தலைமுறையை உருவாக்க, அவர் இளம் பெண்கள் ஆதரவுக் குழுவையும் அதே விழாவில் தொடங்கி வைத்துள்ளார்.








