பேராக் மாநிலத்தில், இரு பத்திரிகையாளர்கள் பயணித்த கார் மீது லாரி மோதிய விபத்து தொடர்பாக, நேரில் கண்டவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 5.45 மணியளவில், ஜாலான் ஈப்போ-லுமுட் சாலையில், தாமான் கிளேடாங் பெர்மாய் போக்குவரத்து விளக்கு சந்திப்பு அருகே இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகான் டத்தோவில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்று கொண்டிருந்த இரு பத்திரிகையாளர்கள் இவ்விபத்தில் காயமடைந்தனர்.
இந்நிலையில், இவ்விபத்து குறித்துப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் வெளியிட்ட அறிக்கையில், விபத்தை நேரில் பார்த்தவர்களும், தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டாஷ்கேமில் விபத்துப் பதிவானவர்கள், அந்தக் காணொளிகளை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.








