கோலாலம்பூர், மே.26-
அடுத்த மாதம் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இலக்குக்கு உரிய ரோன் 95 பெட்ரோல் விநியோகம், அதே விலையில் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு மைகாட் பயன்படுத்தப்படும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
சாரா எனப்படும் சும்பாஙான் அசாஸ் ரஹ்மா அரசாங்க உதவித் தொகையைப் பெறுவதற்கு மைகாட் அட்டை பயன்பாடு, பெரும் வெற்றியை அளித்து இருப்பதால், மக்கள் அந்த முக்கிய அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி உதவித் தொகைக்குரிய ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து மலேசியர்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மைகாட் அட்டையைக் கொண்டுள்ளனர். எனவே அந்த அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி உதவித் தொகைக்குரிய பெட்ரோலை மக்கள் பெறுவதில் சிக்கல் இருக்காது என்று அமீர் ஹம்ஸா அஸிஸான் விளக்கினார்.
இதற்கான வழிமுறைகளை நிதி அமைச்சு தற்போது தயாரித்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமீர் ஹம்ஸா அஸிஸான் இதனைத் தெரிவித்தார்.








