தெலுக் இந்தான், ஜூலை.23-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பழைய வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை நிபோங்கில் உள்ள அந்த பழைய வீட்டில் கடந்த சனிக்கிழமை அந்த மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியான பாசீர் பெடாமாரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த வா கெங் ஜூய்யின் கடைசி மகனின் எலும்புக்கூடாக அது இருக்கலாம் என்று நம்ப்படுகிறது.
அந்த நபர்தான் இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த பழைய வீட்டில் நீண்ட காலமாகத் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. 75 வயதுடைய தனது தம்பியைப் பார்ப்பதற்கு கடந்த சனிக்கிழமை அந்த வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் எலும்புக்கூட்டை மட்டுமே காண முடிந்ததாக அவரின் மூத்த சகோதரர் 78 வயதுடைய நபர் போலீசுக்குத் தகவல் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை ஹீலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் உறுதிப்படுத்தினார்.








