கோலாலம்பூரில், மது போதையில் கார் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது ஆடவர் செலுத்திய கார் மோதியதில், கோலாலம்பூர் மாநகர மன்ற ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில், சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையில் சாலை எச்சரிக்கைப் பலகைகளை நிறுவிய பின்னர் உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர் 28 வயது மேற்பார்வையாளர். காயமடைந்த 49 வயது லாரி ஓட்டுநர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், ஓட்டுநரின் உடலில் 100 மில்லிலிட்டர் ரத்தத்துக்கு 64 மில்லிகிராம் அளவு மதுபானம் இருந்தது தெரிய வந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார். விசாரணைக்காக அந்த ஆடவர் மூன்று நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








