கோலாலம்பூர், ஜனவரி.12-
கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மதியம் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த கம்ப்ரஸர் (Compressor)ஒன்று திடீரென வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த ஒன்பது பேரில் நான்கு பேர் மாணவர்கள் ஆவர். மற்றவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டத்தோ ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.








