சிரம்பான், ஜனவரி.09-
போர்ட்டிக்சனில் உள்ள Food Court உணவகத்தின் வெளியே மூன்று தனிநபர்களை வெட்டுக்கத்தியால் சரமாரியாகத் தாக்கி பலத்த காயங்கள் விளைவித்ததாக மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மூன்று சகோதரர்களான 30 வயது A. யோகேந்திரன், 25 வயது குகேந்திரன், 23 வயது சினியல்குமார் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து 28 வயது S. சத்தியமூர்த்தி, 20 வயது K.முனீஸ்வரன் மற்றும் 26 வயது A. செல்லன் ஆகிய அறுவர், நீதிபதி K. கனகேஸ்வரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி இரவு 8.05 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் அமானில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே 36 வயது V. வித்தியாத்ரன், 31 வயது M. தமிழரசன் மற்றும் 43 வயது M. கோபு ஆகியோரை வெட்டுக்காத்தியால் தாக்கிக் கடும் காயங்களை விளைவித்ததாக மேற்கண்ட 6 இந்திய இளைஞர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் மூவரும் தங்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை தலா 8 ஆயிரம் ரிங்கிட் ஜானில் விடுவிப்பதற்கு நீதிபதி கனகேஸ்வரி அனுமதித்தார்.
முன்னதாக, இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் M. புஷ்பா, ஒவ்வொருக்கும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்குமாறு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.








