கோலாலம்பூர், ஜூலை.24-
மலேசிய மருத்துவர் ஒருவர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இத்தாலி, Dolomites- ஸில் உள்ள Croda del Becco என்ற மலைப்பாங்கான இடத்தில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது 100 மீட்டர் உயரத்திலிருந்து கீழே பாறையில் விழுந்து உயிரிழந்தார்.
அந்த மலேசிய மருத்துவர் 60 வயது டாக்டர் காவ் பீ லிங் என்று அடையாளம் கூறப்பட்டது. அவர் கெடா, சுங்கை பட்டாணி, மெட்ரோ நிபுணத்துவ மருத்துவமனையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
நண்பர்களுடன் இத்தாலியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , சம்பவம் நிகழ்வதற்கு முதல் நாள், நண்பர்களிடமிருந்து பிரிந்த பிறகு வழித் தவறி அந்த மருத்துவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையின்படி அந்த மருத்துவர் செங்குத்தான மலைப்பாதையில் சறுக்கி, பாறை மீது விழுந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.








