தஞ்சோங் மாலிம், ஜனவரி.31-
தஞ்சோங் மாலிம், கம்போங் கெலாவார் என்ற பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில், நேற்று காலை கத்திக் குத்துக் காயங்களுடன் மியன்மார் நாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 39 வயதுடைய இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சாலையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பண்ணை வீட்டிற்கு வருகை புரிந்த அதன் முதலாளி, அச்சடலத்தைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் அளித்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஹஸ்னி முஹமட் நாசீர் தெரிவித்துள்ளார்.
25 வயதான அந்த பண்ணை வீட்டின் பணியாளர், வயிறு மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் முஹமட் அஸ்னி தெரிவித்துள்ளார்.








