கோலாலம்பூர், ஜனவரி.31-
மலேசிய ஆயுதப் படையின் புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அவரது பதவி நியமனமானது அமலுக்கு வருகின்றது.
மாலிக் ரஸாக்கின் பதவி நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற 633-வது சிறப்பு ஆயுதப் படைகள் குழுக் கூட்டத்தின் பரிந்துரையின்படி, மாலிக் ரஸாக் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, ஜனவரி 30-ஆம் தேதி மாமன்னரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
மலேசிய தேசிய பல்கலைக்கழகமான யுகேஎம்மில் உத்தி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ள மாலிக் ரஸாக், லண்டன் கிங்ஸ் கல்லூரில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், UKM-இல் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தனது இராணுவ வாழ்க்கையை கடந்த 1985-ஆம் ஆண்டு Sandhurst-இல் உள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் வெளிநாட்டு கேடட் அதிகாரியாகத் தொடங்கிய அவர், கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி இரண்டாம் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால இராணுவ சேவையில், அவர் வலுவான திறமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.








