பத்து காஜா, ஜனவரி.31-
பத்து காஜா அருகே உள்ள பூசிங் பகுதியில் நாய் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து, 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், அந்த சந்தேக நபர், பூசிங்கில் உள்ள கடை ஒன்றில் கைது செய்யப்பட்டதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் Md Noor Aehawan Mohammad தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தெரு நாயானது இறந்தது தொடர்பாக, நேற்று காலை 9.30 மணியளவில் 39 வயதான நபரிடமிருந்து புகார் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை 7.30 மணியளவில், பயங்கர வெடி சத்தம் ஒன்றைக் கேட்ட அப்பகுதிவாசிகள் வெளியே வந்து பார்த்த போது, உணவகம் ஒன்றின் அருகே அந்த நாய் இரத்த வெள்ளத்தில் இறந்து காணப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 428-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, விலங்குகள் வதை குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட முதியவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Md Noor Aehawan தெரிவித்துள்ளார்.








