ஈப்போ, ஜனவரி.31-
ஈப்போ தாமான் கிளேடாங் எமாஸ் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 63 வயது மூதாட்டி படுகாயமடைந்தார்.
சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டரின் மூடியை, அந்த மூதாட்டி அடைக்க முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
உறக்கத்திலிருந்து எழுந்த அம்மூதாட்டியின் மகள் ஒருவர், கடுமையான எரிவாயுக் கசிவை வீட்டில் உணர்ந்தவுடன், தனது தாயாருக்கும், சகோதரிக்கும் தகவல் தெரிவித்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் வெளியேறும் முன்பு, அந்த மூதாட்டி சமயலறைக்குச் சென்று எரிவாயு சிலிண்டரின் மூடியை அடைக்க முயன்ற போது, இவ்விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகின்றது.
இவ்விபத்தில் முதாட்டியின் முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.








