கோலாலம்பூர், பிப்ரவரி.19-
கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்குப் பிரம்படி தண்டனையைக் கட்டாயமாக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு அரசாங்கத்தை மூத்த வழக்கறிஞர்கள் இருவரும், குழந்தைகள் நல அமைப்பு தலைவரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏனைய பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்குப் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இந்தத் தண்டனையைச் சேர்ப்பதை நாடாளுமன்றம் கவனிக்கத் தவறி விட்டதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். இத்தகைய குற்றங்கள் அதிக வன்முறைத்தன்மை கொண்டவை என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர்கள் கூறினர்.
வழக்கறிஞர் சலீம் பஷிர் கூறுகையில், மற்ற பாலியல் குற்றங்களுக்குப் பிரம்படி இருக்கும் போது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அது இல்லாதது குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். இது ஒரு சட்டத் தவறு என்றும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கக் கடுமையான தண்டனைகளை வழங்குவது நாடாளுமன்றத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.
திரெங்கானுவில் 12 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால், தண்டனைச் சட்டத்தின் 375B பிரிவின் கீழ் பிரம்படி தண்டனைக்கு இடமில்லாததால், அவர்களுக்குப் பிரம்படி வழங்கப்படவில்லை.
வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் கூறுகையில், சட்டம் திருத்தப்படும் வரை, குற்றவாளிகளைத் தனித்தனியாகப் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் நிறுத்தினால் அவர்களுக்குப் பிரம்படி வழங்க முடியும் எனத் தெரிவித்தார். 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் சில பாலியல் குற்றங்களுக்குப் பிரம்படி வழங்கச் சட்டத்தில் இடமுள்ள நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் இது விடுபட்டிருப்பது வியப்பளிப்பதாக அவர் கூறினார்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான அமைப்பின் இணைத் தலைவர் ஸ்ரீவித்யா கணபதி கூறுகையில், இத்தகைய வழக்குகளை 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் கடும் தண்டனையை உறுதிச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுள்ளது, ஆனால் பிரம்படி என்பது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.








