ஷா ஆலாம், ஆகஸ்ட்.16-
தீப் பிடித்துக் கொண்ட கடை வீட்டிற்குள், தப்பிக்க இயலாமல் சிக்கிக் கொண்டு, உயிருக்குப் போராடிய ஒரு வயதானவர் உட்பட நால்வரைத் தீயணைப்பு, மீட்புப் படையினர் உரிய நேரத்தில் துரிதமாகக் காப்பாற்றி, பாதுகாப்பாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட ஓர் அடுக்குமாடி கடை வீட்டில் நிகழ்ந்தது. வீட்டின் முதல் மாடியிலும். இரண்டாவது மாடியிலும் ஏற்பட்ட தீயின் ஜுவாலையின் மத்தியில் 17 க்கும் 81 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளனர்.
எனினும் கடும் புகையினால் படிக்கட்டுப் பாதை தெரியாமல் தடுமாறிய அந்த நால்வரும், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த நால்வரையும் உரிய நேரத்தில் காப்பாற்றியதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இதில் ஓர் ஆண், இரண்டு பெண்கள் மற்றும் வயது குறைந்த ஒரு பெண் காப்பாற்றப்பட்டதாக அவர் விளக்கினார். தீயை அணைப்பதற்கு அண்டாலாஸ், தென் கிள்ளான், வட கிள்ளான் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையங்களின் 14 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








