கோலாலம்பூர், அக்டோபர்.14-
14 வயது மாணவன், நான்காம் படிவ மாணவியைச் சராமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்வதற்கு முன்னதாக, அந்த மாணவன் தன்னை நோக்கிக் கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வருவதைக் கண்ட அந்த மாணவி உதவிக் கோரி கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவி கத்தியால் குத்தப்பட்ட பின்னர் உதவிக் கோரி கூச்சலிட்டாரா அல்லது கத்தியால் குத்தப்படுவதற்கு முன்னர் உதவிக் கோரினாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவி அலறிய சத்தம், பள்ளியை அதிரச் செய்துள்ளது. அந்த சத்தத்தை ஆசிரியர் ஒருவர் செவிடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
அதன் பின்னரே அந்த ஆசிரியர் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடியதாகவும், அதற்குள் அந்த மாணவன், சம்பந்தப்பட்ட மாணவியைக் கத்தியால் சரமாரியாகக் குத்தி வீழ்த்தி விட்டதாகவும், அந்த ஆசிரியரால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஷம்சுடின் மாமாட் குறிப்பிட்டார்.
அந்த மாணவியின் உடலில் பல இடங்களில் ஆழமான கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. அந்த மாணவன் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரண்டு கத்திகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்தத் தாக்குதலை நடத்திய 14 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் குற்றவில் சட்டம் 302 பிரிவின் கீழ் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
மாணவியின் உடல், சவப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








