இந்தியப்பிரஜை ஒருவரை கொலை செய்து, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி, தூக்கி எறியப்பட்ட சம்பவத்தில் அந்த இந்தியப் பிரஜைக்கு மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக டத்தோ அந்தஸ்தைத்கொண்ட இரும்புக்கடை முதலாளி மற்றும் அவரின் இரு மகன்கள் மீது பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
இரும்புக்கடை முதலாளியான 51 வயது டத்தோ வி. நந்தக்குமார் மற்றும் அவரின் இரு மகன்களான 24 வயது மீரேன் ராம், 22 வயது கீர்த்திக் ராம் ஆகிய மூவரும் நீதிபதி ஃபயிஸ் டிஸ்யாவுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயது விநாயகம் அன்பழகன் என்ற இந்தியப் பிரஜையை , சாகும் வரை அடித்துக்கொன்று, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
டத்தோ நந்தக்குமாரும், அவரின் இரண்டு மகன்களும் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சிலாங்கூர்,செரி கெம்பாங்கான், தாமான் புக்கிட் செர்டாங்கில் உள்ள தங்களுக்கு சொந்தமான இரும்புக்கடை வளாகத்தில் அந்த இந்தியப் பிரஜையின் மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் டத்தோ நந்தக் குமாரும், அவரின் இரு மகன்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளர்.
சம்பந்தப்பட்ட மூவரையும் ஜாமீனில் விடுவிக்குமாறு அவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ சுராஜ் சிங், விண்ணப்பித்த போதிலும் இந்த மூவரும் கொலை தொடர்புடைய சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதால் அச்சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்க அனுமதியில்லை என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மாட் சுஹைனி முஹமாட் அமின் தெரிவித்தார்.
எனினும் தந்தை மற்றும் இரு மகன்களும் நீரிழிவு நோயினால் அவதியுற்று வருவதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் டத்தோ சுராஜ் சிங் சமர்ப்பித்த வாதத்தைத் தொடர்ந்து மூவரையும் தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி ஃபயிஸ் டிஸ்யாவுடின் அனுமதி அளித்தார்.
பட்டுக் கோட்டையில் முடித்திருத்தும் கடையை நடத்தி வரும் அன்பழகனின் மகன் விநாயக மூர்த்தி, 11 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி மலேசியாவிற்கு வந்ததாகவும், கடைசியில் சம்பந்தப்பட்ட இரும்புக்கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்ததாகவும் , பணம் களவாடல் தொடர்பில் அந்த இரும்புக்கடை முதலாளியும், அவரின் மகன்களும் இந்த பாதகத்தை புரிந்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட விநாயகமூர்த்திக்கு பட்டுக்கோட்டையில் புகழேந்தி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளன.








