ஷா ஆலாம், ஜூலை.28-
நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் அரசாங்கம், சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அங்கீரித்துள்ளார். அப்படிபட்ட ஓர் அரசாங்கத்திற்கு எதிராக சவால் விட வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமையொழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் அண்மைய அரசியல் ஒழுங்கீனச் செயல்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்ட பாப்பாராய்டு, கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் துருன் அன்வார் என்ற முழுக்கத்துடன் நடந்த போராட்டமும் இதில் அடங்கும் என்றார்.
சட்டப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்திற்கு சவால் விடுவது, பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் குப்பைகளைக் கொட்டி நிரப்புவது, நாட்டின் முக்கியத் தலைவரின் உருவப் படத்திற்கு பிரம்படி கொடுப்பது போன்ற ஆத்திரமூட்டும் செயல்கள், அராஜகத்தின் உச்சமாகும். மனித நாகரிகத்திற்கு ஒவ்வாத பண்பற்ற செயலாகும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இது தனிநபர்கள் அல்லது கட்சிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மாறாக, இது அரசியலமைப்பு முடியாட்சி முறையை மதிப்பது மற்றும் சட்டபூர்வமான ஆட்சியைப் பற்றியதாகும். நடப்பு அரசாங்கத்தின் சட்டப்பூர்வத் தன்மையை அராஜகமான முறையில் அல்லது ஆத்திரமூட்டும் செயல்களின் வாயிலாக காட்ட முற்படுவது, மாமன்னரின் அதிகாரத்திற்கு சவால் விடுவதற்கு ஒப்பாகும் என்பதைத் தாம் கடுமையாக வலியுறுத்து விரும்புவதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
அரசியல் உணர்ச்சிகளை மேலோங்க செய்து, இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவதும் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதும், மக்களின் உன்னத மதிப்பைக் கெடுக்கும் இது போன்ற நாகரிகமற்ற கலாச்சாரத்தை மலேசியர்கள் முழு வீச்சில் நிராகரிக்க வேண்டும் என்று பாப்பராய்டு ஓர் அறிக்கையின் வழி வலியுறுத்தியுள்ளார்.








