கோலாலம்பூர், நவம்பர்.03-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பல அறுவை சிகிச்சைகளின் விளைவாக அம்பாங் அரசு மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களின் கவனக்குறைவினால் உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளான ஆடவர் ஒருவருக்கு 7.4 மில்லின் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
22 வயது கே. விமல்ராஜ் என்பவருக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சு தியாங் ஜூ உத்தரவிட்டார்.
7.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையில், 6.4 மில்லியன் ரிங்கிட்டில் கே. விமல் ராஜ் ஒரு ரோபோ கை மற்றும் இரண்டு ரோபோ கால்களை வாங்குவதற்கு வழங்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
உடல் உறுப்புகளை இழந்ததால் ஏற்பட்ட வலி மற்றும் துன்பத்திற்கு மொத்தம் இரண்டு லட்சத்து 13 ஆயிரம் ரிங்கிட்டும், வீட்டுப் பராமரிப்புக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டும், கடும் பாதிப்புக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
எனினும் விமலின் தந்தை ஜே. கிருஷ்ணசாமியின் வருமான இழப்புக்கான இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தனது மகனால் தமக்கு வருமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்க கிருஷ்ணசாமி, எந்த ஆவண ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதி சு தியாங் ஜூ தனது தீர்ப்பில் கூறினார்.








