பாயான் லெபாஸ், ஜூலை.19-
தான் எந்தவொரு மக்கள் பணத்தையும் சுரண்டவில்லை என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமே முழு மனதுடன் பாடுபட்டுக் கொண்டிருப்பதால், பதவி விலக வேண்டும் என்ற அவசியம் தமக்கு இல்லை என்று காம்ப்லெக்ஸ் மடானி தெலுக் கும்பார் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
தன் மீதும் தன் செயல்பாடுகள் மீதும் ஏதேனும் திருப்தியின்மை இருந்தால் எதிர்கட்சியினர் நாடளுமன்றத்திலே விவாதிக்கலாம் என்றும் மேலும், நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என பிரதமர் தெளிவுபடுத்தினார். நான் பதவி விலக வேண்டுமேனில், நாடாளுமன்றத்தில் முறையாக அதற்கான ஆதரவுகளைத் திரட்டி எதிர்கட்சியினர் நிரூபித்தால் தான் நிச்சயம் பதவி விலகி விடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தன்னுடைய 3 வருட ஆட்சிக் காலத்தில் தான் எந்தவொரு சட்டத்திற்கும் புறம்பான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் மீது வழக்கு பதியப்பட்டால் அதில் தான் தலையிடப் போவதில்லை என்பதையும் ஏற்கனவே அறிவித்து விட்டதாகக் கூறிய பிரதமர், 10 லட்சத்திற்கு மேல் சொத்துரிமை இருந்தால் அதனை விசாரணையில் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கட்டளையும் அமைச்சர்களுக்குக் கொடுத்து விட்டதாக வலியுறுத்தினார்.








