கோலாலம்பூர், செப்டம்பர்.30-
மலேசியாவின் தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் கோலாலம்பூர் மையப் பகுதியில் வீற்றிருக்கும் மெனாரா கேஎல் என்றழைக்கப்படும் கோலாலம்பூர் கோபுரத்தின் வரவேற்புச் சுவரில் பிற பிரதான மொழிகளுடன் தமிழ்மொழியும் இடம் பெறுவதற்கு ஆவனம் செய்யப்பட்டது.
தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் விளைவாக 21 நாட்களிலேயே வரவேற்புச் சுவரில் தமிழ் இடம் பெற்றது.
நாட்டின் தலைநகரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு அடுத்து முக்கிய நில அடையாளமாக விளங்கும் மெனாரா கேஎல் கோபுரத்தில் வரவேற்புச் சுவரில் மலாய், ஆங்கிலம், மெண்டரின் மொழிகள் உட்பட உலகப் பிராந்தியத்தின் பிரதான 20 க்கும் மேற்பட்ட மொழிகள் இடம் பெற்றுள்ள வேளையில் தமிழ்மொழி இடம் பெறாதது குறித்து தமிழ்ப்பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஓன் ஊடகங்களில் இம்மாதம் முற்பகுதியில் பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவும் தமிழ் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பியதுடன் தமது ஆட்சேபத்தையும் பதிவுச் செய்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தை நேரடியாக தொடர்புதுறை துணை அமைச்சர் தியோ நீ சிங்கின் கவனத்திற்குக் கொண்டுச் சென்றார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி இவ்விவகாரம் தம்முடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாக நாட்டின் முக்கிய மொழிகளான தமிழ் மட்டுமின்றி கடசான், ஈபான் ஆகியவற்றை அந்த வரவேற்வுச் சுவரில் பொறிக்கப்பட்டதுடன் சீன மொழியின் வளமும் மேன்மையுறச் செய்யப்பட்டதாக துணை அமைச்சர் தியோ குறிப்பிட்டார்.
இன்று காலையில் மெனாரா கேஎல் கோபுரத்திற்கு வருகை புரிந்து, தமிழ் உட்பட மேலும் புகுத்தப்பட்டுள்ள இதர மொழிகளை நேரடியாகப் பார்வையிட்ட தியோ, பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ், மெனாரா கேஎல் கோபுரத்தை நிர்வகித்து வரும் ஒப்பந்த நிறுவனமான LSH Capitol Berhad- டின் நிர்வாகம் சாராத தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ லிம் கெங் செங், LSH Capitol Berhad- டின் தலைமை செயல்முறை அதிகாரி கைரில் ஃபைஸால் ஒத்மான், தொடர்புத்துறை அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணை அமைச்சர் தியோ விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப மெனாரா கேஎல் கோபுரத்தின் வரவேற்புச் சுவரில் எழுத்துகளை மறுபரிசீலனை செய்து, அங்கே தமிழ் இடம் பெற ஆவனம் செய்யப்பட்டது.
மலேசியாவில் தமிழ் முக்கிய மொழி மட்டுமின்ற அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். மலேசிய கலாச்சாரப் பாரிம்பரியத்தின் முன்னணி மொழியாகத் தமிழ் விளங்குகிறது என்று தியோ வர்ணித்தார்.
எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் மடானி மலேசியாவின் உணர்வுடன் தீர்க்கும் வல்லமையை நடப்பு அரசாங்கம் கொண்டுள்ளது என்பதையே இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று தியோ பெருமிதம் தெரிவித்தார்.








