ஷா ஆலாம், ஜனவரி.23-
கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி, திரெங்கானு, ஜெர்தேவிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிமிற்கு சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகமான உப்சியைச் சேர்ந்த 42 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் பலியான சம்பவத்திற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளி வந்துள்ளன.
போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணைச் சிறப்புக் குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில், இந்தப் பேருந்து சட்டவிரோதமாக இயக்கப்பட்டது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் விபத்திற்கான 4 முக்கிய காரணங்களையும் அது விளக்கியுள்ளது. உரிய அனுமதியின்றி பேருந்து மற்றொரு தரப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
பேருந்து உரிமமான பெர்மிட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் கலை, கலாச்சார அமைச்சின் கீழ் வழங்கப்படும் சில விலக்கு நடைமுறைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தரைப் போக்குவரத்து பொது ஆணையமான ஸ்பாட் நிர்ணயித்து இருந்தப் பாதுகாப்புத் தொழில்முறை விதிகள் பிற்பற்றப்படவில்லை.
இதற்கு மேலாக சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு ஏற்கனவே அதிவேகப் பயணம் உட்பட பல டஜன் போக்குவரத்துச் சம்மன்கள் இருந்தும், அதனைச் சரிபார்க்காமல் அந்தப் பேருந்து நிறுவனம் அவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.
தகுதியற்ற, ஒழுக்கமற்ற மற்றும் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஓட்டுநர்களைப் பொதுப் போக்குவரத்து வாகனங்களை ஓட்ட அனுமதிப்பது, ஒரு முறையற்ற நிர்வாகச் செயல்பாட்டைக் காட்டுகிறது என அந்த சிறப்புக்குழு தனது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளது.








