தம்மை அடித்து துன்புறுத்தியதுடன் வீட்டைக் கொளுத்தப் போவதாக மிரட்டிய கணவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்த ஓர் இந்திய மாது, ஈப்போ நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் கடும் எச்சரிக்கைக்கு ஆளானார்.
கணவரை மிரட்டுவதற்கு போலீஸ் புகாரை ஒரு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாதுவிற்கு மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் நினைவுறுத்தினார்.
தமது கணவர் ஜி. கணேசன் தம்மை அடித்து துன்புறுத்தியதாக 36 வயது எஸ்.பிரேமலதா, செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து கணேசனுக்கு எதிரான வழக்கு இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்தது.
எனினும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமது கணவருக்கு எதிரான புகாரை மீட்டுக்கொள்ளப் போவதாக கிந்தா, மாவட்டம், செமோர் ரை சேர்ந்த பிரேம் லதா நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
போலீஸ் புகார் விளையாட்டு அல்ல. நினைத்த மாத்திரம் புகார் அளிப்பதற்கும், அதனை மீட்டுக்கொள்தற்கும் விளையாட்டுப்பொருள் அல்ல. உங்கள் விளையாட்டை காட்டுவதற்கு போலீஸ் நிலையத்தை ஒரு தளமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த பெண்மணிக்கு மாஜிஸ்திரேட் நினைவுறுத்தினார்.
38 வயது கணேசன் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செம்மோரில் உள்ள தமது வீட்டில் மனைவியை அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
தனக்கு எதிராக குற்றத்தை கணேசன் மறுத்து விசாரணை கோரியுள்ள வேளையில் பிரேமலதா, அந்த போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிரேமலதாவை மாஜிஸ்திரேட் கண்டித்தார்.








