ஜோகூர் பாரு, பிப்ரவரி.11-
ஜோகூர் பாரு, தாமான் செத்தியா டுரோப்பிக்கா அருகே உள்ள கெம்பாஸ் பாரு சாலையில், கடந்த இரண்டு வாரங்களாக மூதாட்டி ஒருவர் குப்பைகளால் ஆன தற்காலிகக் கூடாரத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் பழைய துணிகளைக் கொண்டு சுவராகவும் கூரையாகவும் அமைத்து, அந்த அசுத்தமான சூழலில் அவர் தங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
49 வயதான ஷம்சுல் பத்ரி இஸ்மாயில் என்பவர் இந்த அவலநிலையை முதலில் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.
அந்த மூதாட்டி யாரிடமும் பேச மறுப்பதாலும், அடையாளச் சான்றுகள் இல்லாததாலும் அவர் உள்ளூர்வாசியா அல்லது வெளிநாட்டவரா என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. சுகாதாரச் சீர்கேடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்த்தொற்று அபாயம் உள்ள அந்த இடத்திலிருந்து அவரை மீட்க சமூக நலத்துறை விரைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜொகூர் மாநில மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்குழுத் தலைவர் கைரின்-நிசா இஸ்மாயில் கூறுகையில், இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.








