கோத்தா பாரு, ஆகஸ்ட்.11-
டிரெய்லர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர விபத்தில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இச்சம்பவம், இன்று காலை 9 மணியளவில் கிளந்தான், கோத்தா பாரு, ஃபெல்டா சீக்கு 1, ஜாலான் உத்தாமாவில் நிகழ்ந்தது. இந்த விபத்து தொடர்பில் காலை 9.07 மணியளவில் குவா மூசாங் தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றனர் என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஹோண்டா ரகக் காரில் பயணித்த ஐவர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதாக அவர் கூறினார்.
காரைச் செலுத்திய மாது, சம்பவ இடத்திலேயே மாண்டார். இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.








