May 17, 2026
Thisaigal NewsYouTube
100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மே.17-

தொழிலாளர் சந்தையை மேம்படுத்தவும் கிக் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புத் திறனை உயர்த்தவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘PACE’ தேசியத் திறனாளர் திட்டத்தை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

TVET, இளைஞர் திறன் மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதாரம், உள்ளூர் நிறுவன வலுப்படுத்தல் மற்றும் கிக் தொழிலாளர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இத்திட்டம் வெறும் பயிற்சி திட்டம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த பொருளாதாரத்திற்குத் தகுந்த திறமையான பணியாளர்களை உருவாக்கும் பெரிய முதலீடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேலை இழந்தோருக்கான சமூகப் பாதுகாப்பு, இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான HRD Corp பயிற்சிகள், இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்கான 20 மில்லியன் ரிங்கிட் சமூகப் பாதுகாப்பு நிதி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான 10 மில்லியன் ரிங்கிட் மானியம் உள்ளிட்ட 4 முக்கிய கூறுகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொருளாதார நிலைத்தன்மை தொகுப்பு 2026-இன் ஒரு பகுதியாக, 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்பிலான ‘PACE’ திட்டத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News