பண்டார் பாரு, ஆகஸ்ட்.23-
தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டது, தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதால் அவ்விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நாடு 68 ஆவது தேசிய தினத்தை இன்னும் ஒரு வார காலத்தில் கொண்டாடவிருக்கிறது. மக்கள் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த தேசியக் கொடியை ஏற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்செயலாக நிகழ்ந்த தேசியக் கொடியை தலைகீழாகக் கட்டப்பட்ட சம்பவங்களை ஊதி, பெரிதுப்படுத்திக் கொண்டு இருப்போமானால் மக்கள் தேசியக் கொடியை பறக்க விடவே பயப்படும் நிலை ஏற்படலாம் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
எனினும் யாராவது தேசியக் கொடியை வேண்டுமென்றே தலைகீழாகப் பறக்கவிடுவார்களேயானால் உரிய நடவடிக்கைக்காக போலீசில் புகார் செய்யலாம். போலீசாரும் 1963 ஆம் ஆண்டு பெயர் மற்றும் சின்னங்கள் சட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை எடுப்பர் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.








