Oct 5, 2026
Thisaigal NewsYouTube

மலேசியப் பிரஜை பன்னீர் செல்வத்திற்கு அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியப் பிரஜை பன்னீர் செல்வத்திற்கு அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு

கோலாலம்பூர், அக்டோபர்.04-

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காகத் தூக்குத் தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யக் கோரி, பன்னீர் செல்வம் செய்து கொண்ட ஆகக்கடைசி மேல்முறையீட்டு மனுவைச் சிங்கப்பூர் அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் வைகறை நேரத்தில் பன்னீர் செல்வத்திற்குத் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு தேதி, நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான 38 வயது பன்னீர் செல்வத்திற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து அவரின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை இன்று சனிக்கிழமை காலையில் தெரியப்படுத்தியிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த ஒன்பது நாட்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்படும் இரண்டாவது நபராக பன்னீர் செல்வம் விளங்குகிறார். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை, ஜோகூர், உலு திராமைச் சேர்ந்த 39 வயது கே. தட்சணாமூர்த்திக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்குக் காத்திருக்கும் பன்னீர் செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 51.84 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதற்காக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எழுத்தாளரும், கவிஞருமான பன்னீர் செல்வம், தனது மரணத் தண்டனை நிறைவேற்றத் தேதியைத் தெரியாமலேயே கடந்த வாரம், 'Death Row Literature' எனும் மரண வரிசை இலக்கியம் எனும் ஒரு நூலை சிறைச்சாலையில் வெளியிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →