கோலாலம்பூர், செப்டம்பர்.24-
சிங்கப்பூரில் போதைப்பொருளைக் கடத்தியதற்காக ஒரு மலேசியப் பிரஜையான தட்சணாமூர்த்தி காத்தையாவிற்கு நாளை செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை வைகறை நேரத்தில் சாங்கி சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது.
தனது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி 39 வயதுடைய தட்சணாமூர்த்தி பயன்படுத்திய அனைத்து சட்ட அம்சங்கள் மீதான மேல்முறையீடுகளும் நிராரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் தூக்குத்தண்டனை நிறைவேற்றம் உறுதிச் செய்யப்பட்டது.
தட்சணாமூர்த்தியை அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகக் கடைசியாகப் பார்ப்பதற்கு ஏதுவாக வருகையாளர் நேர காலகெடுவை இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி மதியம் வரை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை வாரியம் நீட்டித்து இருந்தது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு நாளை வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியின் பிரேதத்தைக் கோருவதற்கு அவரின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக அறியப்படுகிறது.
கடந்த 2011 ஆண்டு ஜனவரியில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் போதைப்பெருளைக் கடத்தியதற்காக தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கத் தீர்ப்பளித்தது.








