அடுத்த ஆண்டு ரஷ்யா மற்றும் மலேசியா இடையிலான தூதரக உறவுகள் 60 ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், இரு நாடுகளும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தெரிவித்துள்ளார்.
ஆசியான் – ரஷியா நினைவேந்தல் உச்சநிலை மாநாட்டிற்கு இடையே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்தித்த விளாடிமிர் புதின், 60 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், எதிர்காலத்தில் மேலும் பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளின் அமைச்சுகள், அரசாங்கத் துறைகள் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையே தொடர்ந்து தொடர்புகள் பேணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு கூட்டு அரசாங்க ஆணையமும் செயல்பட்டு வருவதாகவும் விளாடிமிர் புதின் விவரித்துள்ளார்.
மேலும், இருதரப்பு வர்த்தகமும், தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட புதின், 2025 ஆம் ஆண்டில் ரஷ்யா - மலேசியா வர்த்தகம் 12.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மனிதநேய உறவுகள் உள்ளிட்ட துறைகளில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








