Jul 16, 2026
Thisaigal NewsYouTube
தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

Share:

புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய ஸ்குவாஷ் மையத்தை மேம்படுத்தும் ஏலம் தொடர்பாக 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளையும் மலேசிய விளையாட்டு அரங்கத்தின் தலைமைச் செயலதிகாரி இலியாஸ் ஜாமில், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

42 வயதான அவர், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது, அதனை மறுத்து தாம் குற்றமற்றவர் என வாதிட்டார்.

இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(B)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்களுக்கு அதே சட்டப்பிரிவு 24(1)-ன் கீழ் தண்டனை வழங்கப்படலாம்.

மேலும், இலியாஸ் ஜாமில் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டின் படி, தேசிய ஸ்குவாஷ் மையத்தின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் 8.73 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்திற்கான ஏலத்தை ஏரோலக்ஸ் பவர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, ஒப்பந்ததாரரான யாப் இயோ குவென் என்பவரிடம் இருந்து 10 லட்சத்து 5,000 ரிங்கிட் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஸ்ரீபெட்டாலிங்கில் உள்ள மலேசிய விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

மீதமுள்ள ஆறு குற்றச்சாட்டுகளில், அதே திட்டத்துடன் தொடர்புடைய சலுகையை வழங்கும் நோக்கில், கடந்த பிப்ரவரி 25 முதல் ஏப்ரல் 13 -ஆம் தேதி வரை ஏழு தனித்தனி பரிவர்த்தனைகள் மூலம் யாப் இயோ குவென்னிடமிருந்து மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமாக பெற்றதாக இலியாஸ் ஜாமில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணப் பரிவர்த்தனைகள் ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள பிஎஸ்எம் அலுவலகத்திலும், பவில்லியன் புக்கிட் ஜலில் பகுதியில் உள்ள ஓர் உணவகத்திலும் நடந்ததாகக் கூறப்படுகின்றது.

Related News