கோலாலம்பூர், மே.18-
சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு வசதிகளானது அப்பகுதி மாணவர்களின் தடகளத் திறமைகளை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் அவர்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, அப்போட்டிகளில் சிறந்து விளங்க பேருதவியாக இருக்கும் என கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
இதற்காக தமது நாடாளுமன்ற ஒதுக்கீட்டில் இருந்து 3 லட்சத்து 96 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளியில் 8 தடங்கள் கொண்ட 100 மீட்டர் ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டமானது கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் இன்று திங்கட்கிழமை, சிகாம்புட் பள்ளியில் நடைபெற்ற ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை திறப்பு விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஹன்னா இயோ இதனைத் தெரிவித்தார்.
அதே வேளையில், மலேசிய வரலாற்றில் இந்திய வீரர்கள் பலர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சாதனைப் படைத்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த 100 மீட்டர் ஓட்டப் பாதையை அமைக்கத் தாம் முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக நாம் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் ஹன்னா இயொ தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்ற தமிழ்ப்பள்ளிகள் அல்லது அருகிலுள்ள பள்ளிகள் இந்த வசதியை பயன்படுத்த விரும்பினால், அவர்களுடன் இணைந்து ஒரு அட்டவணை உருவாக்கி, பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து அனைவரும் சேர்ந்து பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் விஜயன், தாங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வசதிகளை செய்து கொடுத்த ஹன்னா இயோவுக்கும், அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மாணவர்களின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 100 மீட்டர் ஓட்டப் பாதையை உருவாக்க முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், அப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் என அனைவருடனும் கலந்தாலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுரேஷ்குமார் விஜயன் தெரிவித்தார்.








