புத்ராஜெயா, டிசம்பர்.01-
கடந்த வாரம் வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்படும் போது, அவருக்குச் சொந்தமான உடமைகளை அதிகாரிகள் சட்டவிரோதமாகப் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று வன்மையாக மறுத்தது.
கைது நடவடிக்கையின் போது ஆல்பெர்ட் தேவிடம் பறிக்கப்பட்ட உடமைகள் யாவை என்பதைப் பட்டியலிடப்பட்டு, அவரிடம் அதிகாரிகள் கையொப்பத்தையும் வாங்கியதாக எஸ்பிஆர்எம் தொடர்பு வியூகப் பிரிவு தெரிவித்தது.
முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆல்பெர்ட் தேவின் உடமைகளை அதிகாரிகள் சட்டவிரோதமாகப் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எஸ்பிஆர்எம் வன்மையாக மறுப்பதாக அது தெரிவித்துள்ளது.
எஸ்பிஆர்எம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும், சட்டத்திற்கு உட்பட்டும், நடப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டும் மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
ஆல்பெர்ட் தேவின் கைப்பேசிகள், ஒரு iPad, டிஜிட்டல் வீடியோ பதிவு போன்ற வழக்கிற்குத் தேவையானப் பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அது விளக்கம் அளித்தது.
தனது கணவரின் உடமைகளை எஸ்பிஆர்எம் சட்டவிரோதமாகப் பறித்துச் சென்றதாகவும், அவை திருப்பித் தரப்பட வேண்டும் எனவும் ஆல்பெர்ட் தேவின் துணைவியார் லீ பெய் ரீ, தனது வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh Sohanpal ஆகியோர் மூலம் நேற்று கோரிக்கை விடுத்து இருந்தார்.








