அண்டை நாடுகளில் பணிபுரியும் மலேசியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், PERKESO சமூக பாதுகாப்பு காப்பீடு வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பயனடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக எல்லைத் தாண்டும் மலேசிய தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 54 மரணங்கள் பதிவாகின்றன என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கு இந்தப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அரசு தற்போதைய சட்ட அமைப்புகளை வலுப்படுத்தி, சுயவேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017-இல் திருத்தம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியால் 4.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








