நீலாய், செப்டம்பர்.27-
நீலாய், லெங்கெங்கில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் விளையாட்டுப் போட்டியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சாக்கடைக் குழியில் விழுந்து ஒன்பது வயது மாணவன் மரணமுற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவிற்கு, கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இன்று காலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த சாக்கடைக் குழியில் விழுந்து மாணவன் மரணமுற்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு கல்வித் தலைமை இயக்குநர் அஸாம் அமாட் உத்தரவிட்டார்.
அதே வேளையில் பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதை பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








