மலேசிய விமானப்படையை சேர்ந்த சில அதிகாரிகளுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பலானது, ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி 21 முறை, 156 மில்லியன் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் முறியடிக்கப்பட்ட இந்தக் கும்பல் குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.
தாவாவ் பகுதியில் செயல்பட்ட அக்கும்பலின் பிரிவு ஒன்று, ஏழு முறை ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி 1.8 டன் மெத்தம்பெட்டமைனைக் கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், லாபுவான் பகுதியில் செயல்பட்ட பிரிவு, 14 முறை ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி 1.2 டன் போதைப்பொருளைக் கடத்தியுள்ளதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, இந்தக் கடத்தல் கும்பல் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ள நிலையில், மற்றவர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக சைஃபுடின் தெரிவித்துள்ளார்.








