மலேசிய விமானிகள், மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் போது, அவர்கள் தங்களது வேலை அல்லது விமானி உரிமத்தை இழக்காத வகையில், தேசிய அளவிலான மனநலப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சு, தற்போது விமானப் போக்குவரத்துக் குழுமம், தனது விமானிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக, நலுரி (Naluri) என்ற நிறுவனம் தொழில்முறை ஆதரவு வழங்குவதுடன், மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான சிஏஏஎம் (CAAM) விமானிகளுக்கான மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானிகள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான பாதிப்புகளுக்கு அச்சமின்றி உதவி பெறும் வகையில் தேசியத் திட்டத்தை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்யும் என அமைச்சு தெரிவித்துள்ளது.








