நாட்டில் இணையவழி விற்பனைத் தளங்கள் மூலம் விற்கப்படும் இறக்குமதிப் பொருட்களும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இணையான தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி கானி தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் தரமற்ற இறக்குமதிப் பொருட்கள் சந்தையில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதனைக் கட்டுப்படுத்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முஹமட் அலி மற்றும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முறையான தரச்சான்று இல்லாத பொருட்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதிப்பதுடன் பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துவதையும் ஜொஹாரி சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில் சில பொருட்கள் வாங்கிய இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே பழுதடைந்து விடுவதாகவும், எனவே இணையவழி விற்பனைப் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








